காரில் மதுபானம் கடத்தல்... சிஐடி பெண் அதிகாரி கைது!

By கவிதா குமார்

குஜராத்தில் மதுபானம் கடத்த முயன்ற கடத்தல்காரருக்கு உதவிய பெண் குற்றப் புலனாய்வுத்துறை (சிஐடி) அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை பிடித்து மக்களுக்கு தண்டனை வழங்குபவர்கள் போலீஸார் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது. ஆனால் சமீபத்தில் குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் காவல் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) போலீஸ் அதிகாரி ஒருவர் மதுபானம் கடத்த முயன்றபோது கடத்தல்காரருக்கு உதவியதாக பிடிபட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலம், கட்ச் பகுதியில், பெண் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) போலீஸ் அதிகாரி ஒருவர், மதுபானம் கடத்த முயன்றபோது கடத்தல்காரருக்கு உதவியதாக பிடிபட்டார். அவர் மீது ஐபிசி 307 மற்றும் 427 பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சிஐடி அதிகாரி நீதா சவுத்ரி,

இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், " நேற்று முன்தினம் இரவு, கட்ச்சின் பச்சாவ் காவல் நிலையப் பகுதியில் உள்ள சோப்த்வா பாலம் அருகே போலீஸார் வாகனச் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர்.

யுவராஜ் சிங்குடன் கைது செய்யப்பட்ட சிஐடி அதிகாரி நீதா சவுத்ரி,

அப்போது, ​​வெள்ளை நிற வாகனம் காவல்துறை சோதனையைக் கண்டு தப்ப முயன்றது. ஆனால், அந்த வாகனத்தை விரட்டி பிடித்தோம். அந்த வாகனத்தை சோதனை செய்ததில் 16 மதுபாட்டில்கள் மற்றும் 2 பீர் கேன்கள் சிக்கியது. அத்துடன் அந்த வாகனத்தில் இருந்தது கட்ச் கிழக்கு சிஐடி அதிகாரி நீதா சவுத்ரி, கடத்தல்காரர் யுவராஜ் சிங் என்று தெரியவந்தது. அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளோம்" என்றார்.

கைது செய்யப்பட்ட யுவராஜ் சிங் 16 வழக்குகளில் தொடர்புடையவர் என்றும், கொலைமுயற்சி உள்ளிட்ட 6 வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிஐடி அதிகாரி நீதா சவுத்ரி கடந்த காலங்களில் போலீஸ் சீருடையில் நடன வீடியோக்கள் எடுத்து பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE