மது விற்பனையை தடை செய்யக்கோரி தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி!

By கே.காமராஜ்

தஞ்சாவூர் அருகே கள்ளச்சந்தையில் மது விற்பதை தடுக்கக் கோரி கண் பார்வையற்ற ஒருவர், விஏஓ அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த ஆலிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (56). பார்வையற்றவரான இவர் தனது கிராமம் தொடர்பாக சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தார். தங்களது கிராமத்தின் அருகே ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் கள்ளச் சந்தையில் அதிகாலை 4 மணிக்கு மது விற்பனை நடைபெறுவதாக அவர் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தார்.

ரவிச்சந்திரனிடம் விசாரணை நடத்தும் போலீஸார்

இது தொடர்பாக அதிகாரிகளை நேரில் சந்தித்தும் அவர் பல முறை மனுக்களை அளித்துள்ளார். ஆனால் போலீஸார் மனுக்களின் மீது இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும், கள்ளச் சந்தையில் மது விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று ஒரத்தநாடு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு வந்த ரவிச்சந்திரன், திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து தன் உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

ரவிச்சந்திரனிடம் விசாரணை நடத்தும் போலீஸார்

உடனடியாக அங்கே பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். அப்போது போலீஸாரின் காலில் விழுந்து, கள்ளக்குறிச்சி சம்பவம் போல் நடைபெறாமல் தடுக்க வேண்டும் எனவும் தங்கள் கிராமத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கதறி அழுத்தார். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE