தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டி... இந்திய பெண்கள் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

By கே.காமராஜ்

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தென்னாப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகள், ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒரு நாள் போட்டி தொடரை இந்திய பெண்கள் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்திருந்தது. இதையடுத்து டெஸ்ட் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 28ம் தேதி துவங்கியது. முதல் நாளிலேயே சஃபாலி வர்மாவின் இரட்டை சதம், ஸ்மிருதி மந்தனாவின் சதம், ஹர்மன்பிரீத், ரிச்சா, ஜெமிமா ஆகியோரின் அரை சதங்களுடன் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 603 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.

தென்னாப்பிரிக்கா பெண்கள் அணியை பந்தாடிய இந்திய அணி

இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ ஆனுக்கு தள்ளப்பட்டது. அந்த அணியில் மரிசேன் காப், சுனே லூஸ் ஆகியோர் அரைசதம் அடித்திருந்தனர். இதை எடுத்து 2வது இன்னிங்ஸை துவங்கிய தென்னாப்பிரிக்க அணியில் லாரா வோர்வார்ட் 122 ரன்களும், சுனே லூஸ் 109 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். நாடின் டி கிளார்க் 61 ரன்கள் எடுத்திருந்தார். இதனால் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 2வது இன்னிங்ஸில் 373 ரன்கள் மட்டும் எடுத்திருந்தது. இந்தியா தரப்பில் முதல் இன்னிங்ஸில் சினே ராணா 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். இரண்டாவது இன்னிங்சில் சினே ராணா, தீப்தி சர்மா, ராஜேஸ்வரி கெய்க்வாட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

இந்திய அணி வீராங்கனைகள்

37 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பெண்கள் அணி இன்று 2வது இன்னிங்ஸை துவங்கியது. இதில் சதீஷ் சுபா 13 ரன்களும், சஃபாலி வர்மா 24 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் 9.2 ஓவர் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து டி20 தொடரின் முதல் போட்டி வருகிற 5ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE