நீட் தேர்வை வியாபாரமாக்கி விட்டார்கள்; அது பணக்காரர்களுக்கான தேர்வாகிவிட்டது - மக்களவையில் ராகுல் காந்தி அதிரடி!

By வீரமணி சுந்தரசோழன்

நீட் தேர்வை மாணவர்கள் நம்பவில்லை. இது பணக்காரர்களுக்கானது, தகுதியானவர்களுக்கான தேர்வு இல்லை என மாணவர்கள் கருதுகிறார்கள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இன்று கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “நீட் தேர்வுக்காக பல ஆண்டுகள் மாணவர்கள் தயாராகிறார்கள். அவர்களின் குடும்பம் பணத்தை செலவழிப்பதுடன், உணர்வு ரீதியாகவும் மாணவர்களுடன் நிற்கிறார்கள். நான் சந்தித்த ஒவ்வொரு நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவரும் அந்த தேர்வு பணக்காரர்களுக்கானது என்றும் எழை மாணவர்களுக்கு உதவாது என்றும் தெரிவித்தார்கள். இந்த அரசுக்கு மாணவர்களின் எதிர்காலத்தில் அக்கறை இல்லை." எனத் தெரிவித்துள்ளார்.

நீட்

நீட் தேர்வை ஏழைகளுக்காக கொண்டு வருகிறோம் என்று சொன்னார்கள். தற்போது பணம் படைத்தவர்களுக்கு என்று ஆகிவிட்டது. நீட் தேர்வை வியாபாரம் ஆக்கிவிட்டார்கள். நீட் குறித்து விவாதம் நடத்த கோரினால் அதனை ஏற்க மத்திய அரசு மறுக்கிறது. நீட் தேர்வு ஆரம்பித்து 7 ஆண்டுகள் தான் ஆகின்றது. ஆனால் 7 ஆண்டுகளுக்கு 70 முறை வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடுகளால் 2 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வு எனும் தொழிற்கல்வியை வியாபார கல்வியாக மாற்றிவிட்டார்கள். நீட் தேர்வின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது. ஜனாதிபதி உரையில் கூட நீட் தேர்வு பற்றி ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை” என்று ராகுல் காந்தி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE