அண்ணாமலை தமிழக மக்களுக்கு துரோகம் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - செல்வப்பெருந்தகை எச்சரிக்கை

By வீரமணி சுந்தரசோழன்

அண்ணாமலை தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் துரோகம் செய்வதை நிறுத்த வேண்டும். தமிழின விரோதப் போக்குடன் கன்னடிகா மனநிலையில் தான் அண்ணாமலை தற்போதும் இருக்கிறார் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “பாஜக தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்டாலும் தொடர்ந்து அண்ணாமலை வெறுப்பு அரசியலை செய்து வருகிறார். முதலமைச்சர் மீது அவதூறு பரப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளார். எத்தனையோ அரசியல் கட்சித் தலைவர்கள் இருக்கிறார்கள் இவரை போல் யாரிடமும் வெறுப்பு, திமிரும், ஆணவமும் இல்லை.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் குறித்த மர்மத்தை வெளியிட வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுள்ளார். வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்தும் அதன் பேரில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்தும் ஏற்படுத்தப்பட்ட வேலை வாய்ப்புகள் குறித்தும் சட்டப்பேரவையில் முதல்வர் தெளிவாக எடுத்துரைத்து விட்டார். ஆனால், பிரதமர் மோடி வெளிநாடு சுற்றுப்பயணம் குறித்தும் அப்போது மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்தும் வேலை வாய்ப்புகள் குறித்தும் பேச தயாரா?.

அண்ணாமலை

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இந்தியாவில் உத்தரப் பிரதேசம், குஜராத்தில் தான் கள்ளச் சாராய சாவுகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. அங்கெல்லாம் சிபிஐ விசாரணை நடத்தப்பட்டதா?

ஒரு வட்டச் செயலாளராக இருப்பதற்கு கூட அண்ணாமலை தகுதி இல்லாதவர். அவரை எப்படி தமிழ்நாடு பாஜக தலைவராக நியமித்தார்கள் என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் தொடர்ந்து மக்களால் ஒரு கட்சி புறக்கணிக்கப்பட்டு படுதோல்வி அடைந்து வருகிறது என்றால் அது பாஜக தான்.

இந்திரா காந்தி பற்றியும், காங்கிரஸ் அரசியலை பற்றியும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருக்கு தெரியாது என்று அண்ணாமலை சொல்லியிருக்கிறார். காங்கிரஸ் வரலாறு குறித்து பேச நான் தயாராக இருக்கிறேன். ஆனால் இந்து மகா சபை, ஜன சங்கம் தொடங்கி பாஜக வர பேசுவதற்கு அண்ணாமலை தயாராக இருக்கிறாரா?

அண்ணாமலை - செல்வப்பெருந்தகை

அண்ணாமலை தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் துரோகம் செய்வதை நிறுத்த வேண்டும். தமிழின விரோதப் போக்குடன் கன்னடிகா மனநிலையில் தான் அண்ணாமலை தற்போதும் இருக்கிறார். அவர், "தமிழனாக இருந்தாலும், காவிரி பிரச்சினையில் கன்னட மக்களுக்கு தான் உதவி செய்வேன்" என்று கூறியுள்ளார். இதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. இதை வெளியிட்டால் அரசியலில் இருந்து அவர் வெளியேறி விடுவாரா?

தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக நான் பாடுபடுவேன். ஆனால் தன் கட்சி வேட்பாளர் தோற்க வேண்டும் என்பதற்காகவே பாடுபடுபவர் அண்ணாமலை என்பது அந்தக் கட்சிக்காரர்களுக்கே தெரியும்.பாஜக எங்களை தொட ஆரம்பித்தால், சிருங்கேரி மட ரகசியம், அங்கு யார் இருந்தார்? யாரால் அண்ணாமலை உருவாக்கப்பட்டார்? என்பது குறித்து பேசுவோம்’ என்று அவர் எச்சரித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE