சிறுவர்களை அடித்து ரவுடியாக மாற நினைத்த இளைஞர்... தண்டவாளம் அருகே குத்திக்கொலை!

By கவிதா குமார்

ரவுடியாக ஆசைப்பட்டு மற்றவர்களை அடித்து உதைத்த இளைஞரை அப்பகுதியைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள புலிகேசி நகரைச் சேர்ந்தவர் அப்பு. இவர் மகாலட்சுமி லே அவுட்டில் வசித்து வந்தார். ஏரியாவில் பெரிய தாதாவாக வலம் வர வேண்டும் என்று விரும்பிய அப்பு, அதற்காக அப்பகுதியில் உள்ள இளைஞர்கள், சிறுவர்களை வம்புக்கு இழுத்து அடித்து உதைத்துள்ளார். இதனால் அப்பகுதியில் அப்புவால் பலர் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மகாலட்சுமி லே அவுட் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் சிலரை குச்சியால் அடித்து உதைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஐந்து சிறுவர்களும் அப்புவை கொலை செய்ய முடிவு செய்தனர். இதற்காக ஜீவனஹள்ளி ரயில் தண்டவாளம் அருகே அப்புவை வரச்சொல்லியுள்ளனர். எதற்காக சிறுவர்கள் அழைக்கிறார்கள் என்ற சந்தேகத்துடன் அப்பு இன்று சென்றுள்ளார்.

அப்போது திடீரென அவரை, ஐந்து சிறுவர்களும் தாக்கத் தொடங்கினர். இதனால் அங்கிருந்து அப்பு தப்பித்து ஓடியுள்ளார். ஆனால், அவரை கத்தியால் குத்தியதுடன், தலையில் கல்லைப் போட்டு அந்த சிறுவர்கள் கொலை செய்தனர். இதன் பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இந்நிலையில், ரயில் தண்டவாளம் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்டு கிடப்பது புலிகேசி நகர் போலீஸாருக்குத தகவல் கிடைத்தது. அவர்கள் விரைந்து சென்று அந்த உடலை மீட்டு விசாரணை நடத்திய போது, கொலை செய்யப்பட்டது அப்பு என்பது தெரிய வந்தது. அவரை ஐந்து சிறுவர்கள் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் அருண்குமார், ஜான் ஜேக்கப், ஆண்ட்ரூஸ், பிரசாந்த், சஞ்சீவ் ஆகியோரை கைது செய்து புலிகேசி நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE