தமிழகத்தில் 90 மி.லி. அளவில் டெட்ரா பேக்கில் மதுபானம் விற்க அரசு திட்டமிட்டு வருவதாகவும், இது சமூகத்தில் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் கடுமையான பாதிப்புகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கள்ளச்சாராயம் இவ்வளவு தூரம் பரவலானதற்கு காரணம் அதன் விலை குறைவு என்றும், இதன் காரணமாகவே உடல் உழைப்பு தொழிலாளர்கள் உள்ளிட்ட எளிய மக்கள் அவற்றை வாங்கி அருந்துவதாகவும் தகவல் உலவுகின்றன. இந்நிலையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க குறைந்த அளவில் அதாவது 90 மி.லி. கொண்ட காகித குடுவையில் (டெட்ரா பேக்), மது விற்பனை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் இந்த திட்டம் குறித்து அறிந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி ஊடகம் ஒன்றுக்கு தொலைபேசி வாயிலாக அவர் தொடர்புகொண்டு கூறுகையில், “கடந்த ஆண்டே இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. அப்போது அவர்கள் (அரசு) கூறுகையில் மது பாட்டில்களை ஆங்காங்கே வீசுவதால் சுற்றுச் சூழலுக்கு கேடு. ஆகையால் டெட்ரா பேக்கில் மது விற்க திட்டமிட்டுள்ளோம் என அமைச்சர் முத்துசாமி தகவல் தெரிவித்தார்.
அப்போது பாமக கடுமையாக எதிர்த்ததால் அந்த முடிவை கைவிட்டார்கள். இந்நிலையில் தற்போது டெட்ரா பேக்கில் மதுவிற்றால் அளவும், விலையும் குறைவாக இருக்கும் என்பதால் இதன் மூலம் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும் என கூறி, மீண்டும் அத்திட்டத்தை கையிலெடுத்துள்ளார்கள். டெட்ரா பேக் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு பொது இடங்களுக்கு செல்ல முடியும். இதன் காரணமாக இளைஞர்கள் மேலும் அதிக அளவில் பாதிக்கப்பட கூடும்.
அடிமைப்படுத்தக் கூடிய போதைப் பொருள்கள் மலிவான விலையில் கிடைக்கக் கூடாது என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. மது போன்ற போதை பொருள்கள் எளிதாக வாங்க முடியாத விலையில் இருந்தால் தான் அவற்றை தவிர்க்க முடியும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது.
எனவே, தமிழக அரசு இந்த முடிவை தவிர்க்க வேண்டும். மேலும், மது விலக்கை படிப்படியாக கொண்டுவர தமிழக அரசை வலியுறுத்துகிறேன். போதைப் பொருளை ஒழித்தால்தான் அடுத்த தலைமுறையை காப்பாற்ற முடியும். இதை மீறி டெட்ரா பேக் மது விற்பனையை அரசு செயல்படுத்த முன்வந்தால் பாமக கடுமையான போராட்டத்தை முன்னெடுக்கும்”
இவ்வாறு அவர் கூறினார்.