வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி; திடீரென சாலையில் வலம் வந்த முதலை: வைரலாகும் வீடியோ

By வ.வைரப்பெருமாள்

மகாராஷ்டிராவின் கடற்கரையோர மாவட்டமான ரத்னகிரியில் ஒரு பெரிய முதலை, திடீரென சாலையில் வந்ததைக் கண்டு வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லுன் கிராமத்தின் குறுகலான சாலையில் பெரிய முதலை ஒன்று சாதாரணமாக உலா வந்தது. திடீரென முதலை, சாலையில் குறுக்கிட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து தங்களது வாகனங்களை நிறுத்தினர்.

இதனால் அந்த வழியே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், முதலை சர்வ சாதாரணமாக சாலையில் நடந்து வந்ததால் அதனை கண்டவர்கள் அச்சமடைந்தனர்.

இந்நிலையில் காரில் சென்ற வாகன ஓட்டி ஒருவர் முதலை சாலையில் நடமாடுவதை பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லுன் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

சாலையில் உலா வந்த முதலை

இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஆறுகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. ரத்னகிரி மாவட்டம் முதலைகளுக்கு பெயர் பெற்றது. சிப்லுன் கிராமத்தில், பல முதலைகளின் இருப்பிடமான, சிவன் ஆற்றிலிருந்து இந்த முதலை வெளியே வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE