நடைமுறைக்கு வந்தது புதிய குற்றவியல் சட்டங்கள்: டெல்லியில் சாலையோர வியாபாரி மீது முதல் வழக்குப்பதிவு!

By வ.வைரப்பெருமாள்

புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் பாரதிய நியாய சன்ஹிதா 2023-ன் கீழ், முதல் வழக்கு, புது டெல்லி கம்லா மார்க்கெட் காவல் நிலைய பகுதியில் சாலையோர வியாபாரி மீது பதிவு செய்யப்பட்டது.

இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), பாரதிய நியாய சன்ஹிதாவாகவும், சிஆர்பிசி, நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவாகவும், இந்திய சாட்சியச் சட்டம் பாரதிய சாக்ஷ்ய அதினியமாகவும் மாற்றப்பட்டுள்ளன.

பாரதிய நியாய சன்ஹிதாவில் ஐபிசியின் 511 பிரிவுகளுக்குப் பதிலாக 358 பிரிவுகள் உள்ளன. இதில் மொத்தம் 20 புதிய குற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் 33 குற்றங்களுக்கான சிறைத்தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது. 83 குற்றங்களில் அபராதத் தொகை உயர்த்தப்பட்டுள்ளதுடன், 23 குற்றங்களில் குறைந்தபட்ச தண்டனை விதிக்கப்படும்.

புதிய குற்றவியல் சட்டங்கள்

சிஆர்பிசி-ன் 484 பிரிவுகளுக்குப் பதிலாக பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதாவில் 531 பிரிவுகள் உள்ளன.இதில் மொத்தம் 177 விதிகள் மாற்றப்பட்டு 9 புதிய பிரிவுகள் மற்றும் 39 புதிய துணைப் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. சட்டம் 44 புதிய விதிகள் மற்றும் விளக்கங்களைச் சேர்த்துள்ளது. 35 பிரிவுகளில் காலக்கெடுவும், 35 இடங்களில் ஆடியோ-வீடியோ வசதியும் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 14 பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

இந்திய சாட்சிய சட்டத்துக்குப் பதிலாக வந்துள்ள பாரதிய சாக்ஷ்ய அதினியத்தில் பழைய சட்டத்தில் இருந்த 167 விதிகளுக்குப் பதிலாக 170 விதிகள் இருக்கும். மொத்தம் 24 விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இரண்டு புதிய விதிகள் மற்றும் 6 துணை விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 6 விதிகள் நீக்கப்பட்டுள்ளன.

போலீஸ் விசாரணை

இந்த மூன்று குற்றவியல் சட்டங்களும் இன்று (ஜூலை 1) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் புதிய குற்றவியல் சட்டங்களில் முதல் வழக்காக, புதுடெல்லி, கம்லா மார்க்கெட் பகுதியில் உள்ள பிரதான சாலைக்கு அருகில் ஒரு வண்டியில் தண்ணீர் மற்றும் புகையிலை விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. இது பயணிகளுக்கு இடையூறாக இருந்த குற்றச்சாட்டின் பேரில், பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 285-ன் கீழ் சாலையோர வியாபாரி பங்கஜ் குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE