மாடியில் இருந்து நண்பரை கீழே தள்ளிக் கொன்ற வாலிபர்: குடிபோதையில் வெறிச்செயல்!

By கவிதா குமார்

குடிபோதையில் நண்பரை கட்டிடத்தில் இருந்து தள்ளி விட்டுக் கொலை செய்த இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் விஷால் யாதவ், அபிஷேக். இவர்கள் இருவரும் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள அஞ்சனாபூரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் தினக்கூலி தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை கட்டிடத்தின் கீழ் ரத்த வெள்ளத்தில் விஷால் யாதவ் இறந்து கிடந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தலகட்டாபூர் காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மாடியில் இருந்து கீழே விழுந்ததால் விஷால் யாதவ் இறந்தது தெரிய வந்தது. அந்த இடத்தை போலீஸார் சோதனை செய்த போது, மதுபாட்டில்கள் கிடந்தன.

இதனையடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் கிடைத்த தகவல்களின்படி, விஷால் யாதவும், அபிஷேக்கும் நேற்று இரவு மது குடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் விஷல் யாதவை மாடியில் இருந்து அபிஷேக் கீழே தள்ளிக் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவான அபிஷேக்கை போலீஸார் தேடி வருகின்றனர்.

எதற்காக தனது நண்பரை மாடியில் இருந்து அபிஷேக் தள்ளி விட்டு கொலை செய்தார் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் குடிபோதையில் மாடியில் இருந்து நண்பரை ஒருவர் தள்ளி விட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE