நடிகர் கமல்ஹாசன் இந்தியன் தாத்தாவை கடவுளுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் என்ற புது சர்ச்சை கிளம்பியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சித்தார்த் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘இந்தியன்2’. ஜூலை 12ம் தேதி படம் வெளியாக இருக்கும் நிலையில், படத்திற்கான புரோமோஷனைப் படக்குழு தொடங்கியுள்ளது. மும்பை, மலேசியா எனப் பறத்துக் கொண்டிருக்கும் படக்குழுவினரிடம் எழுப்பப்படும் கேள்வி- பதில்களும் டிரெண்டிங்கில் உள்ளது.
அந்த வகையில், சமீபத்தில் ’இந்தியன்2’ படத்தில் சேனாதிபதி வயது குறித்து எழுப்பப்பட்ட கேள்வி வைரலனாது. சேனாதிபதி வர்மக்கலை பயின்று, சுயஒழுக்கத்துடன் இருப்பவர் என்பதால் அவருக்கு வயது தடையில்லை என்று இயக்குநர் ஷங்கர் பதில் கூறியிருந்தார்.
இது பற்றி மீண்டும் ஆங்கில ஊடகம் ஒன்றின் நேர்காணலில் கேள்வி எழுப்பப்பட்டபோது கமல் கடுப்பாகியுள்ளார். “இதுபோன்று கேள்வி எழுப்பி சங்கடப்படுத்துபவர்களைத் தவிர்க்க விரும்புகிறேன். நாம் யாரும் சூப்பர் மேன், ஹனுமனின் வயதைக் கேட்பதில்லை.
ஹனுமன் பல யுகங்களைக் கடந்து வாழ்ந்து வருகிறார். பல இடங்களுக்கும் போய் வருவதாக புராணக் கதைகள் சொல்கின்றன. அதனால்தான், அவரை தெய்வங்களிலேயே நீண்ட காலம் வாழ்ந்தவர் என்று கூறுகிறோம்” என்று பதில் சொல்லி இருக்கிறார். இந்த பதில் தான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ’இந்தியன் தாத்தா என்ன கடவுளா? நாத்திகரான கமல் ஏன் ஹனுமனுடன் அவரை ஒப்பிட்டு பேச வேண்டும்?’ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.