தமிழக அரசின் எதிர்ப்பிற்கிடையே சேலம் பல்கலைகழக துணை வேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலம் நீட்டிப்பு... ஆளுநர் உத்தரவு!

By கே.காமராஜ்

தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்புக்கிடையே சேலம் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் பதவி காலத்தை நீட்டித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்து வருபவர் ஜெகநாதன். இவர் மீதும், முன்னாள் பதிவாளர் தங்கவேல் மீதும் ஏராளமான குற்றச்சாட்டுகளை பல்கலைக்கழக பணியாளர்கள் முன் வைத்தனர். குறிப்பாக தனியார் நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் நிதிகளை மோசடி செய்ததாக ஜெகநாதன் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்த புகாரின் பேரில் கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி கருப்பூர் காவல்துறையினரால் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். 8 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றத்தால் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனிடையே தொடர்ந்து நிதி முறைகேடு புகார்கள் எழுந்து வந்ததால், ஜெகநாதனை பதவியில் இருந்து நீக்க வேண்டுமென தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

சேலம் பெரியார் பல்கலைகழகம்

துணை வேந்தர் ஜெகநாதனின் பதவி காலம் நாளையுடன் முடிவு பெற உள்ள நிலையில் அவரது பதவி காலத்தை வருகிற 2025ம் ஆண்டு மே 19ம் தேதி வரை நீட்டித்து ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது எனவும், அவரை பணியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், ஆளுநரின் இந்த அறிவிப்பு அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE