சினிமா பாணியில் போலீஸார் மீது தாக்குதல்... குற்றவாளியை மீட்டுச் சென்ற கும்பலால் பரபரப்பு!

By கவிதா குமார்

சினிமா பாணியில் போலீஸாரை தாக்கி குற்றவாளியை ஒரு கும்பல் மீட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.

கர்நாடகா மாநில கடக் நகரில் உள்ள பெடகேரி ரயில் பாலம் அருகே சில மர்ம நபர்கள் காவல் துறையினரை தடுத்து திடீர் தாக்குதல் நடத்தினர். அத்துடன் காவல் வாகனத்தின் கண்ணாடியை உடைத்த மர்மநபர்கள் போலீஸாரையும் தாக்கி, குற்றவாளியை தங்களோடு அழைத்துச் சென்றுள்ளனர். அந்த குற்றவாளியை அழைத்துச் செல்லும் போது கங்காவதி போலீஸாரையும் அந்த கும்பல் தாக்கியுள்ளது.

தாக்குதலுக்குள்ளான வாகனம்.

நேற்று நள்ளிரவு நடந்த இந்த சம்பவத்தில் கங்காவதியைச் சேர்ந்த இரண்டு போலீஸார் மற்றும் கார் ஓட்டுநர் காயமடைந்தனர். அவர்கள் மூவரும் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், " கடக்கில் உள்ள எம்.எஸ்.கிருஷ்ணா நகரில் இருந்து அலி என்ற குற்றவாளியை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது மர்மக்கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் காயமடைந்த இரண்டு போலீஸ் அதிகாரிகள் மற்றும் கார் ஓட்டுநர் காயமடைந்துள்ளனர். அவர்கள் கடக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

இதே போல ராய்ச்சூர் மாவட்டத்திலும் போலீஸார் மீது கொள்ளைக் கும்பல் நேற்று நள்ளிரவு தாக்குதல் நடத்தியது. ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் நகரில், காவல் ஆய்வாளரின் வாகனத்தை குறிவைத்து கொள்ளை முயற்சி நடந்தது. அப்போது அவர்கள் நடத்திய தாக்குதலில் போலீஸ் ஜீப் சேதமடைந்தது. காவலர்களும் காயமடைந்தனர். ஸ்கார்பியோ காரில் வந்த கொள்ளைக்கும்பல் இந்த தாக்குதலை நடத்தியது.

கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள்

இந்த நிலையில், பொதுமக்கள் உதவியுடன் மூன்று கொள்ளையர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் யாத்கிரி மாவட்டத்தில் உள்ள கன்யா கோளூர் தாண்டாவைச் சேர்ந்த குமார் (35), குருராஜ் (25), சுரேஷ் (45) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். காயமடைந்த போலீஸாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல் துறையினர் மீது அடுத்தடுத்து நடந்த தாக்குதல் சம்பவம், கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE