கோவையில் தாயிடமிருந்து பிரிந்ததால் முதுமலை யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த 3 மாத ஆண் குட்டி யானை உயிரிழந்துள்ள சம்பவம் வன உயிரின ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலை வனப்பகுதியில் கடந்த 9-ம் தேதி பெண் காட்டுயானை ஒன்று உடல் நலக்குறைவு காரணமாக படுத்திருப்பதை வனத்துறை பணியாளர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து அந்த யானைக்கு சுமார் 5 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த பெண் யானையுடன் 3 மாதமேயான குட்டி யானை ஒன்றும் சுற்றித் திரிந்தது. தாய் யானைக்கு சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, ஆண் குட்டி யானை மற்றொரு குட்டி யானையுடன் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் அதனைத் தேடி வந்தனர். அப்போது கூட்டத்துடன் சென்ற குட்டி யானை, தனியாக மருதமலை அடிவாரத்தில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. அதனை மீண்டும் தாய் யானையுடன் சேர்க்க வனப்பணியாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இதனால் அந்த குட்டி யானையை முதுமலை யானைகள் முகாமில் வைத்து பராமரிக்க முடிவு செய்யப்பட்டு, குட்டி யானை அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக குட்டி யானையை அங்குள்ள வனத்துறை ஊழியர்கள் பராமரித்து வந்தனர்.
இதனிடையே கடந்த சில நாட்களாக குட்டி யானைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவர்கள் அதற்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 8:45 மணி அளவில் உயிரிழந்தது. இதையடுத்து இன்று அந்த குட்டி யானையின் உடலை பிரேதப் பரிசோதனை செய்து, அடக்கம் செய்ய வனத்துறை ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டு வனத்துறையினரின் கண்காணிப்பில் இருந்த குட்டி யானை உயிரிழந்திருக்கும் சம்பவம் கோவை மற்றும் நீலகிரி மாவட்ட வன உயிரின ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.