ரூ.70 லட்சம் சம்பாதிக்கும் வரனைவிட கிரிக்கெட் போட்டியே முக்கியம்... வியப்பில் ஆழ்த்திய மணமகள் தந்தை

By எஸ்.எஸ்.லெனின்

இந்தியா - இங்கிலாந்து டி20 அரையிறுதி போட்டி காரணமாக, மகளின் திருமண பேச்சுவார்த்தையை ஒத்தி வைத்த தந்தை நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.

இந்தியர்கள் மத்தியில் கிரிக்கெட் ஆட்டத்தை ரசிப்பது என்றால் உணவு, உறக்கத்தை ஒத்தி வைக்கவும் தயங்கமாட்டார்கள். அதிலும் இந்தியா பங்கேற்கும் ஆட்டங்களை ரசிக்க தலைபோகும் வேலையென்றாலும் தள்ளி வைப்பதில் வித்தகர்கள். இதனை நிரூபணம் செய்யும் வகையில் சுவாரசிய நிகழ்வொன்று இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து

​தனது உறவினருக்கு இணையத்தில் வரன் தேட முயன்றபோது, இந்தியா - இங்கிலாந்து டி20 உலகக் கோப்பை 2024 அரையிறுதிப் போட்டியை முன்வைத்து, ​ நடந்த சுவாரசியத்தை அவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த சம்பவம் இந்தியர்களின் கிரிக்கெட் ஆட்டத்தின் மீதான பித்தை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.

ராகுல் என்னும் அந்த உறவினர் வருடத்துக்கு ரூ70 லட்சம் ஊதியம் பெறும் உயர்பதவியை வகித்து வருகிறார். திருமணத்துக்கு தயாராகி வரும் அந்த இளைஞர், ஆன்லைன் வரன் பார்க்கும் தளம் ஒன்றில் கண்ணில்பட்ட மணமகள் ஒருவரால் ஈர்க்கப்பட்டார். உடனே மணமகள் வீட்டார் தரப்பை தொடர்பு கொள்தற்காக, ஆன்லைன் தளத்தின் பிரத்யேக சாட்டிங்கை பயன்படுத்தினார். அதன் மூலம் தன்னை அறிமுகப்படுத்தியும் கொண்டார்.

மாதம் ரூ5.8 லட்சம் ஊதியம் பெறும் வரன் என்பதால் தன்னை தவிர்க்காது உடனே தொடர்புகொள்வார்கள்; திருமண பேச்சுவார்த்தையில் மும்முரம் காட்டுவார்கள் என்று மாப்பிள்ளை ராகுல் எதிர்பார்த்திருந்தார். ஆனால் அங்கே அவருக்கு ஏமாற்றம் காத்திருந்தது. மறுமுனையில் தொடர்பு கொண்டவர் தன்னை மணமகள் பிரியங்காவின் தந்தை என அறிமுகம் செய்துகொண்டதோடு, ’கிரிக்கெட் மேட்ச் போய்க்கொண்டிருக்கிறது. மேட்ச் முடிந்ததும் பேசலாமே’ என்று உரையாடலை துண்டித்திருக்கிறார்.

இந்த சாட்டிங் விவரங்களின் ராகுலின் உறவினர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ’ஆண்டுக்கு ரூ70 லட்சம் சம்பாதிக்கும் மாப்பிள்ளையைவிட, பெண்ணைப் பெற்றவருக்கு கிரிக்கெட் போட்டி முக்கியமாகி விட்டதா?’ என நெட்டிசன்களும் வியப்புடன் வினா எழுப்புகின்றனர். மேலும், இந்தியர்கள் மத்தியில் கிரிக்கெட் ஆட்டத்துக்கான முன்னுரிமைகள் குறித்தும், அது சற்றே பித்தான மனநிலையில் மக்களை வைத்திருப்பது குறித்தும் இணையத்தில் தீவிரமான விவாதத்துக்கு வழி செய்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE