தினசரி மல்டி-வைட்டமின் உட்கொள்வது மரண அபாயத்தை வரவழைக்கக்கூடும்; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

By எஸ்.எஸ்.லெனின்

தினசரி மல்டிவைட்டமின்களை உட்கொள்வது மக்கள் நீண்ட காலம் வாழ உதவாது எனவும், ஆரம்பகால மரணத்தின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்றும் ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.

பரிபூரண ஆரோக்கியம், நோய் எதிர்ப்பாற்றல், கூடுதல் ஆயுள் ஆகியவற்றுக்காக மல்டி வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் போக்கு தற்போது அதிகரித்துள்ளது. ஆரோக்கிய குறைவுக்காக மருத்துவர்கள் பரிந்துரைப்பதற்கு அப்பாலும், மருத்துவர் ஆலோசனை உடனோ அல்லது இன்றியோ சுய விருப்பத்தின் பேரிலும் தினசரி வைட்டமின் மாத்திரை எடுத்துக்கொள்ள பலரும் விரும்புகின்றனர். ஆனால் அவற்றால் உருப்படியான பலன் இல்லை என்பதோடு, மரண அபாயத்துக்கும் வித்திடக்கூடும் என்கிறது புதிய ஆய்வு முடிவு.

வைட்டமின் உட்கொளல்

‘ஜாமா நெட் ஒர்க் ஓபன்’ என்பதில் வெளியான இந்த ஆய்வில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக 4,00,000 ஆரோக்கியமான பெரியவர்கள் உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வின் முடிவில் ’நீண்ட ஆயுளை மேம்படுத்த மல்டி வைட்டமின் பயன்பாடு உதவவில்லை" என்று கண்டறியப்பட்டது. ஆச்சரிய அதிர்ச்சியாக, நீண்ட காலம் வாழ்வதற்குப் பதிலாக, மல்டிவைட்டமின்களை எடுத்துக் கொண்டவர்கள் 4 சதவீதம் அதிகமாக உயிரிழக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வுக்காக, மேரிலாந்தில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் உள்ள டாக்டர் எரிக்கா லோஃப்ட்ஃபீல்ட் மற்றும் சகாக்கள், மூன்று முக்கிய அமெரிக்க சுகாதார ஆய்வுகளின் தரவை ஆய்வு செய்தனர். அனைத்தும் 1990-களில் தொடங்கப்பட்டன. பங்கேற்பாளர்களின் தினசரி மல்டிவைட்டமின் பயன்பாடு பற்றிய விவரங்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டன. 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பின்பற்றப்பட்ட இந்த ஆய்வில், தினசரி மல்டிவைட்டமின்கள் இறப்பு அபாயத்தை குறைக்கின்றன என்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் எந்த ஆதாரத்தையும் காணவில்லை.

உணவூட்டத்தின் மூலம் வைட்டமின் தேவையை பூர்த்தி செய்யலாம்

வரலாற்று ரீதியாக, மாலுமிகள் வைட்டமின் சி மூலம் ஸ்கர்வியிலிருந்து காப்பாற்றப்பட்டனர். அது போலவே, பீட்டா கரோட்டின், வைட்டமின்கள் சி, இ மற்றும் துத்தநாகம் ஆகியவை வயது தொடர்பான சிதைவைக் குறைக்கின்றன. ஆனபோதும் மல்டிவைட்டமின்களை தினசரி தொடர்ந்து உட்கொள்வது, அவற்றின் நோக்கத்தை ஈடேற்றவில்லை என்கிறது ஆய்வு முடிவு. இந்த மல்டிவைட்டமின்களை நேரடியாக உட்கொள்வதற்கு அப்பால், ஆரோக்கியமான உணவுகளை நாம் உண்ணுவதன் மூலம் வைட்டமின் தேவையை பூர்த்தி செய்யலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மல்டிவைட்டமின்களின் விலை அதிகமில்லை என்பதால், அவற்றை நேரடியாக எடுத்துக்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது. இதற்கு பதிலாக இனி உணவில் இருந்து கிடைக்கும் வைட்டமின்களை உடல் கிரகிக்க வழி செய்வதே சிறப்பு எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ’நமது உணவில் அதிக காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் அல்லது பருப்பு வகைகளைச் சேர்ப்பது, சிவப்பு இறைச்சி உட்கொள்ளலைக் குறைப்பது, பணியின் பெயரில் சதா உட்கார்ந்திருக்கும் நேரத்தைக் குறைப்பது, மது அருந்துவதைக் குறைப்பது ஆகியவற்றின் மூலம் நமது நோக்கம் பலிதமாகும்’ என்றும் ஆராய்ச்சியின் முடிவில் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE