தமிழ்நாட்டில் வரி என்ற பெயரில் எங்கள் பேருந்துகளை பறிமுதல் செய்வதா? கேரள அமைச்சர் எச்சரிக்கை

By வ.வைரப்பெருமாள்

தமிழகத்தில் வரி என்ற பெயரில் கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (கேஎஸ்ஆர்டிசி) பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதற்கு தமிழக அரசுக்கு அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.பி.கணேஷ் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட, சுற்றுலா அனுமதி பெற்ற, அரசு சாரா பேருந்துகளுக்கு சமீபத்தில் தமிழக அரசு கட்டுப்பாடு விதித்தது. அதைத் தொடர்ந்து, தமிழகம் வழியாக பயணிகளுடன் செல்லும் பிற மாநிலங்களில் பதிவுசெய்யப்பட்ட தனியார் பேருந்துகளில் தமிழக மோட்டார் வாகனத் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், பிற மாநில பதிவு எண் கொண்ட பேருந்துகள், மாநிலத்தின் பிராந்திய போக்குவரத்து அதிகாரிகளிடம் மீண்டும் பதிவு செய்ய ஜூன் 17ம் தேதியை காலக்கெடுவாக தமிழக அரசு நிர்ணயித்தது.

கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள்

இந்நிலையில் இந்த விவகாரத்துக்கு தமிழக – கேரள அரசுகளிடையே உரசலை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கேரள மாநில சட்டப்பேரவையில் அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.பி.கணேஷ் குமார் நேற்று பேசியதாவது:

"எங்கள் மக்கள் சிரமப்பட்டால், கேரளாவுக்கு வரும் அவர்களின் மக்களை நாங்கள் தொந்தரவு செய்வோம்.

சபரிமலை சீசன் வரப்போகிறது என்பதை மறந்துவிடாதீர்கள். தமிழகத்தில் இருந்து அதிக பக்தர்கள் வருகின்றனர். நாங்கள் எங்கள் கருவூலத்தை நிரப்புவோம். சமீபத்திய வரி உயர்வு குறித்து தமிழக அரசு எங்களுடன் விவாதிக்கவில்லை.

கேரள அமைச்சர் கே.பி.கணேஷ்குமார்

நாடு முழுவதும் ஒரே வரி என்று மத்திய அரசு கூறுகிறது. நாங்கள் நல்லுறவில் இருக்கிறோம். ஆனால் தமிழகம் பேருந்தில் இருக்கைக்கு ரூ.4,000 உயர்த்தியபோது எங்களுடன் விவாதிக்கவில்லை. கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டால், தமிழக பேருந்துகளும் பறிமுதல் செய்யப்படும். இதில் எந்த சமரசமும் இல்லை.”

இவ்வாறு அவர் பேசினார்.

கேரள அமைச்சர் தமிழக அரசுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE