போக்குவரத்து போலீஸாருக்கு ஏசி ஹெல்மெட்... வெப்ப அலை கொடுமையிலிருந்து தப்பிக்க உ.பி ஏற்பாடு

By எஸ்.எஸ்.லெனின்

வெப்ப அலை வீச்சிலிருந்து தப்பிக்க போலீஸாருக்கான பிரத்யேக ஏசி ஹெல்மெட்டுகளை வழங்குகிறது உத்தரபிரதேசம்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் வெப்ப அலை வீச்சு வட இந்தியாவை அலைக்கழித்து வருகிறது. வறட்சி, நிலத்தடி நீர்மட்டம் குறைவது உள்ளிட்ட கோடையின் கெடுபலன்களோடு, கூடுதலாக இந்த ஆண்டு வெப்ப அலை வீச்சு மக்களை தவிக்க விடுகிறது. வட இந்தியாவின் பல மாநிலங்களில் இரட்டை இலக்கங்களில் உயிர்ப்பலிகள் அதிகரித்தன.

ஏசி ஹெல்மெட் - பிரதிநிதித்துவ படம்

மருத்துவமனைகளில் சிறப்பு ஏசி அறைகள், வெப்ப அலை பாதிப்பை குறைக்க சிறப்பு வசதிகள் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. வெப்ப அலைக்கு எளிதில் ஆளாகும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கான சிறப்பு மருத்துவ வழிகாட்டுதல்கள் விடுக்கப்பட்டன. வெப்ப அலை உயிரிழப்புகளை தவிர்க்க, நண்பகல் நேரத்தில் வெயிலில் அலைவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் அதனையே பணியாக மேற்கொள்வோர், வெப்ப அலை வீச்சை பெரும் சவாலாக எதிர்கொண்டுள்ளனர்.

அவர்களின் சிரமம் போக்கும் முயற்சியாக வெயிலில் பணியாற்றும் போலீஸாருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஏசி ஹெல்மெட்டுகளை உத்தரபிரதேச அரசு வழங்கத் தொடங்கியுள்ளது. அவற்றின் அங்கமாக போலீஸாருக்கான ஏசி ஹெல்மெட் வழங்கும் நடவடிக்கையை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று தொடங்கி வைத்தார்.

போலீஸாருக்கு ஏசி ஹெல்மெட் வழங்கும் ஒடிசா திட்டம்

ஏழாண்டு கால ஸ்மார்ட் போலீஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலத்தின் போக்குவரத்து காவலர்களுக்கு என ஏசி ஹெல்மெட்கள் வழங்கப்படுகின்றன. லக்னோவில் நடைபெற்ற தனி நிகழ்வின் போது யோகி ஆதித்யநாத் இந்த ஏசி ஹெல்மெட்டுகளை வழங்கினார். ஒடிசா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் பரிசோதனை அடிப்படையில் இந்த ஏசி ஹெட்மெட் திட்டம் நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரபிரதேசத்தில் கான்பூர் மெட்ரோ திட்டத்திற்கான அஃப்கான்ஸ் உள்கட்டமைப்பு திட்டத்தின் ஆதரவுடன், ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட நிறுவனத்தால் ஏசி ஹெல்மெட்கள் தயாரிக்கப்படுகின்றன. பரிசோதனை அடிப்படையிலான இந்த முயற்சியின் பலன்களைப் பொறுத்து, மாநிலத்தில் கடும் வெயிலில் பணிகளை மேற்கொள்வோருக்கு இந்த ஏசி ஹெல்மெட்டுகள் வழங்கப்பட இருக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE