என் கணவரை வெட்டிக் கொலை செஞ்சுட்டேன்... காவல் நிலையத்தில் சரணடைந்த மனைவி!

By கவிதா குமார்

குடிபோதையில் சித்ரவதை செய்த கணவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மனைவி, காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அசாமில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம், ஹோர்ஹாட் மாவட்டத்தில் உள்ள மரியானி நகருக்கு அருகே ஹிலிகா தேயிலைத் தோட்டம் உள்ளது. இப்பகுதியில் சுஜித் ரவிதாஸ், லக்கிமோனி தம்பதியருடன் வசித்து வந்தனர். அன்றாடம் மதுபோதையில் குடித்து விட்டு வந்து மனைவியை சுஜித் ரவிதாஸ் சித்ரவதை செய்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மரியானி காவல் நிலையத்தில் ரத்தக்கறையுடன் லக்கிமோனி சென்றுள்ளார். தன்னுடைய கணவனை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டதாக கூறினார். இதைக் கேட்ட போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஹிலிகா தேயிலைத் தோட்டம் பகுதிக்குச் சென்று பார்த்த போது, ரத்த வெள்ளத்தில் சுஜித் ரவிதாஸ் கிடந்தார். அவரை போலீஸார், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்த போலீஸார், லக்கிமோனியையும், இக்கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மரியானி காவல் நிலையம்

இதுதொடர்பாக ஜோர்ஹாட் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்வேதாங்க் மிஸ்ரா கூறுகையில்," தனது கணவர் அடிக்கடி குத்து விட்டு வந்து துன்புறுத்தியதாகவும், அவருடைய சித்ரவதையைப் பொறுக்க முடியாமல் கொலை செய்ததாக லக்கிமோனி கூறியுள்ளார். இக்கொலை தொடர்பாக லக்கிமோனியையும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரையும் கைது செய்துள்ளோம். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.

குடிபோதையில் சித்ரவதை செய்த கணவனை மனைவியே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE