விஸ்வ இந்து பரிஷத் தலைவர் விகாஸ் பிரபாகரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஹர்ஜித் சிங், சுக்விந்தர் சிங் குறித்து துப்பு கொடுத்தால் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அறிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம், ரூப்நகர் மாவட்டத்தில் உள்ள நங்கல் நகரைச் சேர்ந்தவர் விகாஸ் பிரபாகர். இவர் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் நங்கல் பிரிவு தலைவராக இருந்தார். இவர் கடந்த 2024 ஏப்ரல் 13-ம் தேதி நங்கல் நகரில் உள்ள அவரது கடையில் இருந்தார்.
அப்போது பைக்கில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத மர்மநபர்கள், விகாஸ் பிரபாகர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதன் பின் அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து விகாஸ் பிரபாகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரபாகர் கொலையின் பின்னணியில் உள்ள சதியை வெளிக்கொணர இந்த வழக்கில் என்ஐஏ விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்தது. இந்த கொலையை பஞ்சாப் மாநிலம், கர்பதானா கிராமத்தைச் சேர்ந்த குல்தீப் சிங்கின் மகன் ஹர்ஜித் சிங் என்ற லடி, ஹரியாணா மாநிலம் அனாஜ் மண்டி அருகே வசித்த சுக்விந்தர் சிங்கின் மகன் குல்பீர்சிங் என்ற சித்து ஆகியோர் செய்தததாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
அவர்கள் மீது ஐபிசி, யுஏ (பி) சட்டம் மற்றும் ஆயுதச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் தலைமறைவானார்கள்.
இவர்களைக் கண்டுபிடிக்க தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தலா ரூ.10 லட்சம் வழங்க முன்வந்துள்ளது. அத்துடன் விகாஸ் பிரபாகரரை கொலை செய்த இரண்டு கொலையாளிகளின் புகைப்படங்களையும் என்ஐஏ வெளியிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பற்றிய தகவல் அறிந்தவர்கள் என்ஐஏ தலைமை அலுவலக தொலைபேசி எண்: 011-24368800, வாட்ஸ்அப்/டெலிகிராம்: +91-8585931100 மற்றும் மின்னஞ்சல் ஐடி: do.nia@gov.in ஆகியவற்றில் பகிரலாம் என்று என்ஐஏ தெரிவித்துள்ளது.
மேலும், அதன் சண்டிகர் அலுவலகத்தை தொலைபேசி எண்: 0172-2682900, 2682901 மூலம் இருவருக்கும் எதிரான தகவல்களைப் பகிர்ந்துகொள்ளலாம்; வாட்ஸ்அப்/டெலிகிராம் எண்: 7743002947 மற்றும் info-chd.nia@gov.in ஐயும் தொடர்பு கொள்ளலாம் என என்ஐஏ தெரிவித்துள்ளது.