சட்டப் பேரவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் அதிமுக எம்எல்ஏ-க்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்து சுமார் 60 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்க தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் கடந்த 20-ம் தேதி முதல் தொடங்கியுள்ளது.
இச்சூழலில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு திமுக அரசின் மெத்தனப் போக்கே காரணம் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் சட்டப் பேரவையில் அதிமுகவினர், தினமும் கருப்பு சட்டை அணிந்து வந்து தொடர் அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து, கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் குறித்து உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
கேள்வி நேரம் முடிந்து இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்க அனுமதிக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தும் அதனை அதிமுக எம்எல்ஏ-க்கள் ஏற்க மறுத்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அவை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து குந்தகம் விளைவிப்பதாக கூறி, நேற்று தீர்மானம் கொண்டுவரப்பட்டு, சட்டப் பேரவையிலிருந்து அதிமுகவினரை இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இந்த நடவடிக்கையை கண்டித்து அதிமுக எம்எல்ஏ-க்கள், கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.