டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் மோசமான சாதனை... இறுதிப்போட்டிக்கு முன்னேறி தென்னாப்பிரிக்கா அபாரம்!

By கே.காமராஜ்

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் அரை இறுதி சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அரை இறுதி போட்டிக்கு இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றன. இதில் முதல் அரை இறுதி போட்டி. டிரினிடாட் அண்ட் டொபகோ நாட்டிலுள்ள பிரையன் லாரா மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இதில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் பங்கேற்றன. சூப்பர் 8 சுற்றில் முக்கிய அணிகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்ததால் இந்த போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆப்கானிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள்

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில், அதிகபட்சமாக அஸ்மதுல்லா ஒமர்சாய் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிற வீரர்கள் அனைவரும் தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஒற்றை இலக்கங்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினர்.

இதனால் 11.5 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 56 ரன்களை மட்டும் சேர்த்திருந்தது. இதன் மூலம் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் குறைந்த ரன்களில் ஆல் அவுட்டான அணி என்ற மோசமான சாதனையை ஆப்கானிஸ்தான் அணி படைத்தது.

ஆப்கானிஸ்தான் அணி 56 ரன்களில் அவுட்டாகி மோசமான சாதனை

தென்னாபிரிக்கா தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஷாம்சி, ஜான்சன் ஆகியோர் 3 விக்கெட்டுகளையும், ரபடா, அன்ரிச் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். 57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில், வழக்கம் போல் குவின்டன் டீ காக் 5 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஹென்றிக்ஸ் மற்றும் மார்க்ரம் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.

தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள்

8.5 ஓவர் முடிவில் அந்த அணி ஒரு விக்கெட் மட்டும் இழந்து 60 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா அணி வரலாற்றில் முதல்முறையாக ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE