நன்றி விஜய்... நெகிழ்ச்சியை வெளிப்படுத்திய ராகுல் காந்தி!

By கவிதா குமார்

மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவரான நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஏழு கட்டமாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. மூன்றாவது முறையாக நரேந்திர மோடி கடந்த 9-ம் தேதி பதவியேற்றார். அதனை தொடர்ந்து 18வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. அப்போது மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ராகுல் காந்தி

இதனையடுத்து, நேற்று மாலை இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து ராகுல்காந்திக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்திக்கு, நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தலைவருமான நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

தவெக தலைவர் நடிகர் விஜய்

இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், " காங்கிரஸ் கட்சியினராலும், அதன் கூட்டணி கட்சியினராலும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல்காந்திக்கு எனது வாழ்த்துகள். நமது நாட்டு மக்களுக்கு சேவை செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துகள்' எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் அதே எக்ஸ் வலைதளப் பக்கத்தின் மூலம் நடிகர் விஜய்க்கு ராகுல்காந்தி நன்றி தெரிவித்துள்ளார். அதில், "ஒவ்வொரு இந்தியனின் குரல் ஒலிக்கும் போதும் நமது ஜனநாயகம் வலுப்பெறுகிறது. நன்றி விஜய்" என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE