மக்களவை எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 294 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சி 234 இடங்களைப் பிடித்து வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. காங்கிரஸ் மட்டும் 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மக்கள் விரோத சட்டங்களை செயல்படுத்த விரும்பினால் அதை முறியடிக்க இந்தியா கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதற்காக மக்களவை எதிர்கட்சி தலைவராக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இருக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஒருமனதாக தெரிவித்தனர். ஆனால், இந்த பதவியை ஏற்க ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்து வந்தார். அவரிடம் காங்கிரஸ் தலைவர்கள் நாட்டின் நலன் கருதி இந்த முடிவை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த நிலையில், டெல்லியில் நேற்று மாலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டார்.
அவருக்கு பல்வேறு கட்சியின் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் வாழ்த்து செய்தியை இன்று வெளியிட்டுள்ளார். அதில், " மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக இந்தியா கூட்டணி மற்றும் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக மாண்புமிகு திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு வாழ்த்துகள். நமது தேச மக்களுக்கு சேவை செய்ய எனது வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்