சுய உதவிக் குழுக்களின் பெயரில் சுமார் 8 கோடி ரூபாய் மோசடி செய்த 4 வங்கி அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை சிபிஐ வளைத்துள்ளது. அது தொடர்பான அதிரடி ஆய்வுகளையும் இன்றைய தினம் சிபிஐ மேற்கொண்டது.
கற்பனையான சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்கியதின் பெயரில் அதற்கான ஆவணங்களை ஜோடித்து, 8 கோடி ரூபாய் மோசடி செய்த அசாம் கிராம வளர்ச்சி வங்கியின் 4 அதிகாரிகள் மீது, மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வழக்கு பதிவு செய்துள்ளது.
நால்வரில் உதவி மேலாளர் பிரசாந்தா போரா என்பவர், ஜோர்ஹாட்டில் உள்ள மாதோபூர் வங்கி கிளைக்கு பொறுப்பாக இருந்திருக்கிறார். குவஹாத்தியை தலைமையிடமாகக் கொண்ட அரசாங்கத்திற்குச் சொந்தமான பிராந்திய கிராமப்புற வங்கியான, அசாம் கிராம வளர்ச்சி வங்கிகளின் இதர 3 பணியாளர்களுடன் சேர்ந்து இவர் மோசடி செய்தது தாமதமாகவே கண்டறியப்பட்டது. வங்கி உயரதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் ஜூன் 22 அன்று சிபிஐயின் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
4 வங்கி பணியாளர்களும் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அசாமில் உள்ளா ஜோர்ஹட், டின்சுகியா மற்றும் திப்ருகார் ஆகிய இடங்களில் அமைந்துள்ள குற்றம் சாட்டப்பட்ட வங்கி அதிகாரிகளின் வசிப்பிடங்கள் மற்றும் வங்கி வளாகங்கள் உட்பட 7 இடங்களிலும், மேற்கு வங்கத்தில் ஒரு இடத்திலும் சிபிஐ அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினர். இவை ஏராளமான குற்ற ஆவணங்களை மீட்டெடுக்க வழிசெய்தது.
பிரசாந்த் போரா தான் பணியாற்றும் வங்கி கிளையிலிருந்து சுய உதவிக் குழு சேமிப்பு வங்கிக் கணக்குகளில் இருந்து சட்டவிரோதமான பணப் பரிமாற்றங்களை மேற்கொண்டார். இதற்காக கற்பனையான பயனாளிகளுடன் முறைகேடான நிதி பரிவர்த்தனைகளை மேற்கொண்டு, அவ்வாறு சேகரிக்கப்பட்ட நிதியை ஜோர்ஹாட்டில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் தனது கணக்குக்கு மாற்றினார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதன் மூலம் வங்கிக்கு ரூ.8,28,42,900 என்றளவில் இழப்பை ஏற்படுத்தினர் என்றும் அந்த தொகை தத்தம் கணக்குகளில் பிரித்து வரவு வைத்தனர் என்றும் சிபிஐ இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அசாம் கிராம வளர்ச்சி வங்கி கிளைகளின் உதவி மேலாளர்களான பிரியங்க்ஷு பல்லப் கோகோய், சோஹன் தத்தா மற்றும் அலுவலக உதவியாளர் சத்யஜித் சல்ஹா ஆகியோர் பிரசாந்த் போராவின் மோசடிக்கு ஒத்துழைத்துள்ளனர். அதன் மூலம் கணிசமான தொகையையும் அவர்கள் பெற்றுள்ளனர்.