கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் தான் இழப்பீடா? - மின்சாரம் தாக்கி பலியானவரின் குடும்பத்தினர் சாலைமறியல்

By கே.காமராஜ்

சேலம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க கோரியும், ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்கக்கோரியும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி முனியப்பன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் (27). இவர் கடைகளுக்கு தகரக் கொட்டகை அமைக்கும் பணி செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு வயதில் பெண் குழந்தை ஆகியோர் உள்ளனர். நேற்று களாங்குத்து தெருவில் உள்ள கடை ஒன்றின் மேல் பகுதியில் தகரக் கொட்டகை அமைக்கப் பணியில் தினேஷ் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சார கம்பி மீது தகர சீட் உரசியதில், மின்சாரம் பாய்ந்து தினேஷ் மயக்கம் அடைந்தார். அவர் மீது தகர சீட்டு மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் உறவினர்கள் போராட்டம்

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த டவுன் போலீஸார், தினேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டம்

இதனிடையே உயிரிழந்த தினேஷின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும், 30 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரி அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சேலம் அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, தமிழ்நாடு அரசு 10 லட்சம் ரூபாய் வழங்கும் நிலையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபரின் குடும்ப வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது அவர்கள் வலியுறுத்தினர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE