பதவியேற்கும் போது 'ஜெய் பாலஸ்தீனம்' என முழக்கம்: அசாதுதீன் ஒவைசியால் பரபரப்பு

By வ.வைரப்பெருமாள்

மக்களவையில் எம்பி-யாக பதவியேற்கும்போது, அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, ஜெய் பாலஸ்தீனம் என முழக்கமிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி. இவர் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் 3.38 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட, பாஜகவின் மாதவி லதாவை தோற்கடித்து ஐந்தாவது முறையாக மக்களவைக்கு தேர்வானார்.

இந்நிலையில் மக்களவையில் நேற்று முதல் எம்பி-க்கள் பதவியேற்பு நடைபெற்று வருகிறது. மாநிலங்களின் அகரவரிசைப்படி எம்பி-க்கள் பதவியேற்க அழைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பதவியேற்புக்கு அசாதுதீன் ஒவைசியின் பெயர் அழைக்கப்பட்டது. அப்போது, ஆளும் ஆட்சியைச் சேர்ந்த சில எம்பி-க்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்’, 'பாரத் மாதா கி ஜெய்' என்ற கோஷங்களை எழுப்பினர்.

ஒவைசி, தனது உறுதிமொழியை வாசித்த பிறகு, 'ஜெய் பீம்’, 'ஜெய் பாலஸ்தீனம்’, 'ஜெய் மிம்’, 'ஜெய் தெலுங்கானா', 'அல்லாஹு அக்பர்' ஆகிய கோஷங்களை எழுப்பினார்.

கோஷங்களுக்கு நடுவே திடீரென 'ஜெய் பாலஸ்தீனம்' கோஷத்தை ஒவைசி எழுப்பியது முதலில் சில எம்பி-க்களுக்கு சென்றடையவில்லை.

அசாதுதீன் ஒவைசி

எனினும் அவர் 'ஜெய் பாலஸ்தீனம்' என கூறியதை மற்ற சில எம்பி-க்கள் கவனித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பிறகு அந்த கோஷம் பதிவு செய்யப்படாது என சபாநாயகர் கூறினார். இதைத் தொடர்ந்து எம்பி-க்கள் அமைதியாகினர். மக்களவையில் 'ஜெய் பாலஸ்தீனம்' கோஷம் எதிரொலித்ததன் காரணமாக சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE