உலக அரங்கில் இந்தியாவின் மதிப்புக்கு சிக்கல் - நாகை மீனவர்கள் கைது குறித்து அன்புமணி ஆதங்கம்!

By வீரமணி சுந்தரசோழன்

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படுவது மீனவர்கள் நலன் சார்ந்த சிக்கல் மட்டுமல்ல. உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு சம்பந்தப்பட்ட சிக்கல் ஆகும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாகை மாவட்டம் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 10 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் மீன்பிடிக்கச் சென்ற படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் (கோப்பு படம்)

கடந்த ஜூன் 17-ஆம் தேதி வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த இரு நாட்களுக்கு முன் இராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டனர். அதனால் ஏற்பட்ட பதற்றம் அடங்குவதற்கு முன்பாகவே மேலும் 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரே வாரத்தில் மொத்தம் 36 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிடம் உதவிகளைப்பெறும் இலங்கை அரசு, இந்தியாவை சற்றும் மதிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள், அரசு முறைப் பயணமாக இலங்கைக்கு சென்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ள நிலையில், அவர் அங்கிருந்த போதும், அங்கிருந்த திரும்பிய பிறகும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்கிறது என்றால், இந்தியாவுக்கு இலங்கை எந்த அளவுக்கு நன்றியுடனும், மதிப்புடனும் நடந்து கொள்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படுவது மீனவர்கள் நலன் சார்ந்த சிக்கல் மட்டுமல்ல. உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு சம்பந்தப்பட்ட சிக்கல் ஆகும். எனவே, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினையில் இலங்கை படையினரின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டு வர அனைத்து வகையான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்’ என அவர் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE