மக்களவையில் தமிழில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி-க்கள்; அண்ணா முதல் உதயநிதி வரை பெயர்களை கூறி முழக்கம்!

By வ.வைரப்பெருமாள்

மக்களவையில் தமிழ்நாட்டு எம்பி-க்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அப்போது எம்பி-க்கள் சிலர் அண்ணா, பெரியார், கலைஞர், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் புகழ் வாழ்க என கூறினர்.

18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இடைக்கால சபாநாயகராக பர்தருஹரி மஹதாப் தேர்வு செய்யப்பட்டார். முதல் நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் எம்பி-யாக பதவியேற்றனர்.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து மக்களவைக்கு தேர்வான திமுக கூட்டணியைச் சேர்ந்த எம்பி-க்கள் பதவியேற்றுக் கொண்டனர். தமிழக எம்பி-க்களில் சிலர் கையடக்க அரசியல் சாசன புத்தகத்தை தங்கள் கைகளில் வைத்து, உறுதி மொழி கூறி பதவி ஏற்றுக் கொண்டனர்.

திமுக எம்பி-க்கள் சிலர் பதவி ஏற்றதும் பெரியார், அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பெயர்களை கூறி, அவர்களது புகழ் வாழ்க என முழக்கமிட்டனர்.

பதவியேற்ற திமுக எம்பி-க்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கப்பாண்டியன்

திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி- சசிகாந்த் செந்தில் பதவி ஏற்கும்போது, "தலித்துகள், சிறுபான்மையினர் மீதான தாக்குதலை நிறுத்துக" என கூறினார்.

இதனால் அவையிலிருந்த பாஜக எம்பி-க்கள் சிலர் எதிர் குரல் எழுப்பியதால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி எம்பி-க்கள் ஒருவர் பின் ஒருவராக பதவி ஏற்றுக் கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE