சனாதனம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ’சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது தான். கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்றவற்றை எதிர்ப்பதை விட ஒழித்து கட்ட வேண்டும். அப்படித்தான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்று பேசி இருந்தார்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து கர்நாடகா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் பரமேஷ் என்பவர் தொடர்ந்து வழக்கில் நேரில் ஆஜராகுமாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து இன்று காலை பெங்களூரு சென்றடைந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது ஒரு லட்சம் ரூபாய் பிணைத்தொகை உடன் நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், விசாரணையை ஆகஸ்ட் மாதம் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.