கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகள்... மெத்தனால் விற்ற 6 பேர் கைது!

By கே.காமராஜ்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகள் வழக்கு தொடர்பாக மெத்தனால் விற்பனை செய்த மேலும் 6 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 59 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

இதனிடையே கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள் மற்றும் அதில் கலக்கப்பட்ட மெத்தனாலை விற்பனை செய்தவர்கள் என பலரையும் சிபிசிஐடி போலீஸார் அடுத்தடுத்து கைது செய்து வருகின்றனர்.

மெத்தனால்

நேற்று வரை இந்த வழக்கு தொடர்பாக 15 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் மேலும் 6 பேரை இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். பெரிய நிறுவனங்களிடமிருந்து மெத்தனாலை வாங்கி, தனி நபர்களுக்கு விற்பனை செய்ததாக இவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டு இருப்பதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

6 பேர் கைது

பென்சிலால், சடையன், ரவி, செந்தில், ஏழுமலை, கௌதமன் ஆகிய 6 பேரிடம் தற்போது சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் எந்தெந்த நிறுவனங்களில் இருந்து மெத்தனாலை வாங்கினார்கள்? எவ்வளவு ரூபாய்க்கு அதனை விற்பனை செய்தார்கள்? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

சிபிசிஐடி கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருவதால் இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE