நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தில் அடுத்தடுத்து அறுந்த வடங்கள்... பக்தர்கள் அதிர்ச்சி!

By வ.வைரப்பெருமாள்

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழாவில் கயிறால் செய்யப்பட்ட தேரின் 4 வடங்கள் அடுத்தடுத்து அறுந்ததால் பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பிரசித்திபெற்ற காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இவ்விழாவின் 9-ம் நாளான இன்று காலை தேரோட்டம் விமரிசையாக தொடங்கியது. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடத்தைப் பிடித்து இழுத்தனர். அப்போது கயிறால் செய்யப்பட்ட வடம் அடுத்தடுத்து 3 வடங்கள் அறுந்து விழுந்தன.

தேரின் வடத்தை பிடித்து இழுக்கும் பக்தர்கள்

இதனால் மாற்று வடங்கள் கொண்டுவரப்பட்டு மீண்டும் தேர் இழுக்கப்பட்டது. இந்நிலையில் தேர் சுமார் 100 அடி தூரம் இழுக்கப்பட்டதும் 4வது வடமும் அறுந்து விழுந்தது. இதனால் பக்தர்கள் கடும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்தனர். இதையடுத்து தேர் இழுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ஆசியாவிலேயே மிக அதிக எடையாக சுமார் 450 டன் எடை கொண்டதாக நெல்லையப்பர் கோயில் தேர் சிறப்புப் பெற்று விளங்குகிறது. இந்நிலையில் அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொள்ளாமல் பழைய வடங்களையே பயன்படுத்த அனுமதி கொடுத்ததால் வடங்கள் அறுந்துள்ளன என பக்தர்கள் குற்றம்சாட்டினர்.

அறுந்து விழுந்த தேரின் வடம்

மேலும், அடுத்தடுத்து தேர் வடம் அறுந்து விழுந்த சம்பவத்தை குறிப்பிட்டு, இந்து முன்னணி அமைப்பினர் அபசகுணம் என கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இரும்பு சங்கிலியாலான வடம் கொண்டுவரப்பட்டு தற்போது தேர் இழுக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.

நெல்லை சுற்றுவட்டாரத்தில் மிகவும் பிரசித்த பெற்ற, லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் தேர் திருவிழாவில், தேரின் வடம் அடுத்தடுத்து அறுந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE