மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு விடிவு காலம் கிடைக்குமா?

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை பராமரிக்க மாநகராட்சி, தமிழக அரசிடம் ரூ.12 கோடி நிதி கேட்டு திட்டமதிப்பீடு அனுப்பிய நிலையில் ரூ. 1 1/2 கோடி மட்டுமே கிடைத்ததால் பேருந்து நிலையத்தை பராமரிக்க முடியாமல் மாநகராட்சி திணறிக் கொண்டிருக்கிறது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அடுத்து தமிழகத்தின் 2-வது மிகப்பெரிய பேருந்து நிலையமாக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் கட்டப்பட்டது. அதன் பிறகு இதைவிட தமிழகத்தின் பிற நகரங்களில் பெரிய பேருந்து நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை, மறைந்த கருணாநிதி முதல்வராக இருந்த போது 1999ம் ஆண்டு திறந்து வைத்த பெருமை கொண்டது.
3,000-க்கும் மேற்பட்ட வெளியூர் பஸ்கள், உள்ளூர் பஸ்கள் 24 மணி நேரமும் வந்து செல்கின்றன. இந்த பேருந்து நிலையம் ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்று சிறப்புடன் ஆரம்ப காலத்தில் செயல்பட்டது.

பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பிட அறைகள் இருந்துள்ளன. ஆனால், தற்போது கட்டண கழிப்பிட அறைகள் மட்டுமே செயல்படுகின்றன. பேருந்து நிலையத்தின் பராமரிப்பும் மோசமாக உள்ளன. பராமரிப்பு இல்லாததால் பேருந்து நிலையத்தின் மேற்கூரைகள் சிதலமடைந்தன. அடிக்கடி மேற்கூரை சிமெண்ட் பூச்சிகள் உடைந்து கீழே விழுந்ததால் பயணிகள் பேருந்து நிலையம் வளாகத்தில் நிற்பதற்கு அச்சமடைந்தனர்.
மழைக் காலத்தில் மழைநீரும் சேதமடைந்தன. பேருந்து நிலையம் வளாகங்கமும், கற்கள் பெயர்ந்து மேடு, பள்ளங்களாகவும் உள்ளன.

பேருந்து நிலையத்தின் வளாகத்தில் செயல்படும் கடைகள், நிர்ணயிக்கப்பட்ட இடத்தை தாண்டி ஆக்கிரமித்து வைத்துள்ளனர். பயணிகள் அமரும் தூன் இருக்கைகளில் குப்பை தொட்டிகளை, பொருட்களை வைத்து உள்ளனர். அதனால், போதுமான இருக்கை இல்லாமல் பயணிகள், பஸ்சுக்காக நின்று கொண்டே உள்ளனர். பெண்கள், முதியவர்கள், நீண்ட நேரம் நிற்க முடியாமல் மிகுந்த சிரமப்படுகிறார்கள். காலையில் மட்டும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், பேருந்து நியைத்தை தூய்மைப்படுத்தி செல்கிறார்கள். அதன் பிறகு பேருந்து நிலையம் பக்கம் அவர்கள் வருவதில்லை.

அதனால், பேருந்து நிலையம், மதியத்திற்கு பிறகு மாசு அடையத்தொடங்குகிறது. இரவு பயணிகள், கட்டண கழிப்பறைகளும் சுகாதாரம் இல்லாததால் அங்கு செல்ல விருப்பமில்லாமல் பயணிகள் திறந்த வெளியில் பேருந்து நிலையம் ஓரங்களில் சிறுநீர் செல்கிறார்கள். அதனால், இரவில் வெளியூர் பஸ்களில் ஏற வரும் பயணிகள், முகம் சுழிக்கும் அளவிற்கும், நீண் நேரம் நிற்க முடியாமல் தூர்நாற்றம் வீசுகிறது. பேருந்து நிலையத்தை பராமரிக்க, மாதம் நகராட்சி தமிழக அரசிடம் ரூ.12 கோடி நிதி கேட்டு திட்டமதிப்பீடு அனுப்பியிருந்தது. ஆனால், ரூ.1 1/2 கோடி மட்டுமே கிடைத்தாக கூறப்படுகிறது.

இந்த நிதியை கொண்டு பேருந்து நிலையத்தில் உடைந்து விழுந்த மேற்கூரைப் பகுதிகளை மட்டுமே மாநகராட்சி மறுசீரமைப்பு செய்து வருகிறது. மற்ற பணிகளை மேற்கொள்ள நிதியில்லாததால் மாநகராட்சி திணறிக் கொண்டிருக்கிறது. மாநகராட்சி, பேருந்து நிலையத்தில் கிடைக்கும் வருவாயை கொண்டு சிதலமடைந்த பேருந்து நிலையத்தை சீரமைத்து, 24 மணி நேரமும் சிப்ட் முறையில் பஸ்நிலையம் வளாகத்தை பராமரிக்க தூய்மைப் பணியாளர்களை நியமிக்கவும், கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘குறைவான நிதியை வந்ததால் முழுமையாக மறுசீரமைப்பு பணி மேற்கொள்ள முடியவில்லை. போதுமான தூய்மைப்பணியாளர்கள் இல்லாததால் பேருந்து நிலையத்திற்கு தனியாக நியமிக்க முடியவில்லை. ஆனால், பேருந்து நிலையத்தை புதுப்பொலிவுப்படுத்தவும், 24 மணி நேரமும் தூய்மைப்படுத்தவும், பேருந்து நிலையத்தை பழைய நிலைக்கு மீட்கவும் திட்டம் தயார் செய்யப்படுகிறது,” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE