டி20 தொடரில் படுதோல்வி... கேப்டன் பதவியைத் துறந்தார் கேன் வில்லியம்சன்!

By கே.காமராஜ்

டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து, நியூசிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து கேன் வில்லியம்சன் விலக்கியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சி பிரிவில் நியூசிலாந்து அணி இடம் பெற்றிருந்தது. இந்த அணியை கேப்டன் கேன் வில்லியம்சன் வழி நடத்தி இருந்தார். சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து அணி, விளையாடிய 4 போட்டிகளில் 2 போட்டிகளில் தோல்வியடைந்து தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன்

இந்த நிலையில் இந்த தோல்வி காரணமாக கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தகவல் தெரிவித்து இருந்தன. இந்த நிலையில் டி20 மற்றும் ஒரு நாள் அணிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக கேன் வில்லியம்சன் அறிவித்துள்ளார்.

இதேபோல் அந்நாட்டு ஒப்பந்தப்படி மத்திய ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் மட்டுமே நியூசிலாந்து அணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால் கேம் வில்லியம்சன் 2024-25-ம் ஆண்டுக்கான நியூசிலாந்து அணியின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்தும் விலகியுள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், கேன் வில்லியம்சனுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து எதிர்வரும் போட்டிகளுக்கு அவரை தேர்வு செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த தொடரில் இருந்து இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட முன்னணி அணிகளும் வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE