ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸார் கலவரத் தடுப்பு ஒத்திகை

By கி.தனபாலன்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் போலீஸார் கண்ணீர் புகை குண்டுகள் வீசி கலவரத்தடுப்பு ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.

ராமநாதபுரம் ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் போலீஸார் பிரச்சினைகளின் போது கூட்டத்தை கட்டுப்படுத்துவது மற்றும் கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்த கலவரத்தடுப்பு ஒத்திகையை இன்று நடத்தினர். கலவரத்தின்போது பொதுமக்களுக்கான அறிவிப்பு, கண்ணீர் புகை குண்டுகளை எவ்வாறு கையாள்வது, எந்தெந்த முறையில் கண்ணீர் புகை குண்டு வீசப்பட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் முன்னிலையில் ஒத்திகை நடைபெற்றது.

இதில் கண்ணீர் புகை குண்டு துப்பாக்கியால் (கேஸ் கன்) மற்றும் வஜ்ரா வாகனம் மூலம் கண்ணீர் புகை குண்டுகள், கையெறி கண்ணீர் புகை குண்டுகளை காவலர்கள் வீசி ஒத்திகை நடத்தினர். முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேஸ் கன் மூலம் சுட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசிக் காண்பித்து காவலர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது ஆயுதப்படை ஆய்வாளர் தங்கமணி, சார்பு ஆய்வாளர் சுரேஷ் கண்ணா மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதப்படை காவலர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு பிரிவு போலீஸாருக்கும் இது போன்ற கலவரத்தடுப்பு பயிற்சி வழங்கப்படும். இன்று அதிரடிப்படை போலீஸாருக்கு பல்வேறு வகையான கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. அடுத்ததாக ஆயுதப்படை போலீஸாருக்கு வழங்கப்படும். இதுபோன்ற ஒத்திகை போலீஸாருக்கு தொடர் பயிற்சியாகவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வாகவும் இருக்கும்” என்றார்.

ஆயுதப்படை மைதானம் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ளது. இங்கு கண்ணீர் புகை குண்டு வீசியதால் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற சிலர், நடந்து சென்ற சிலருக்கு கண்ணீர் புகை பட்டு கண்ணில் எரிச்சல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் கண்ணைக் கசக்கியபடியே சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE