தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 21-ம் தேதி இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 21-ம் தேதி வரை வழக்கத்தை விட 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய கேரள கடலோரப் பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 21-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22, 23 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 21-ம் தேதி வரை ஒருசில இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை வழக்கத்தைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று (திங்கள்கிழமை) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் 7 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ., நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 5 செ.மீ மழை பெய்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், திருத்தணி, ராணிப்பேட்டை மாவட்டம் கலவை, வேலூர் மாவட்டம் காட்பாடியில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் 21-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.