மேற்கு வங்கத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயிலின் பின்புறம் சரக்கு ரயில் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் ரங்காபாணி ரயில் நிலையம் அமைந்துள்ளது. சிலிகுரி ரயில் நிலையத்தை கடந்து நிஜ்பாரி ரயில் நிலையம் அருகே ரங்காபாணி ரயில் நிலையத்தை நோக்கி கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுள்ளது. சிக்னலுக்காக இந்த ரயில் இன்று காலை தண்டவாளத்தில் நின்றிருந்தது.
அப்போது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த மற்றொரு சரக்கு ரயில் முன்னாள் நின்றிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்புறத்தில் மோதியது. இதில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 ரயில் பெட்டிகள் பலத்த சேதமடைந்தன. இந்த பெட்டிகளில் இருந்த 4 பேர் உயிரிழந்திருப்பதாகவும் படுகாயம் அடைந்த பலர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக மீட்புப் பணிகளை தொடங்குமாறு முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டு உள்ளார். சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மீட்புப்படையினர் தற்போது மீட்புப்பணிகளை துவங்கி மேற்கொண்டு வருகின்றனர். பலர் ரயில் பெட்டிகளில் சிக்கியிருக்கலாம் என்பதால், பலி எண்ணிக்கை உயரும் அச்சம் உருவாகியுள்ளது.