நள்ளிரவில் அதிர்ச்சி... வீட்டு வசதி வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்ததால் பரபரப்பு: இளைஞர் படுகாயம்!

By கே.காமராஜ்

தூத்துக்குடியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்த விபத்தில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி அடுத்த கோமஸ்புரம் அருகே ராஜீவ் காந்தி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கே பல்வேறு வீடுகளில் மேற்கூரை பழுதாகி இடியும் நிலையில் உள்ளதாக அந்த பகுதி குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் வீட்டு வசதி வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

தூத்துக்குடி ராஜீவ் காந்தி குடியிருப்பு

இந்நிலையில் இங்கு வசித்து வரும் ஆதிராஜ் என்பவர், மூன்றாவது மாடியில் தனது குடும்பத்துடன் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். ஆதிராஜின் மகன் அருண் பாண்டியன் வீட்டில் உள்ள அறையில் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் மேற்கூரை திடீரென இடிந்து அவர் மீது விழுந்து உள்ளது. மேற்கூரை விழுந்ததில் அருண்பாண்டியனின் தலை மற்றும் உடலின் பல்வேறு பாகங்களிலும் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இடிந்து விழுந்த குடியிருப்பு வாரிய வீட்டின் மேற்கூரை

இந்த சம்பவம் குறித்து வீட்டு வசதி வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு இருப்பதாகவும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக சேதமடைந்த வீடுகளை நேரில் ஆய்வு செய்து அதனை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE