மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் விடுதலை!

By வ.வைரப்பெருமாள்

சென்னையில் நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

சென்னை துரைப்பாக்கம் குமரன் குடில் பகுதியைச் சேர்ந்தவர் நரம்பியல் மருத்துவர் சுப்பையா. இவர் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம், மருத்துவர் சுப்பையா மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள்

விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தில் உள்ள நிலம் தொடர்பாக ஆசிரியர் பொன்னுசாமி என்பவருக்கும், மருத்துவர் சுப்பையாவுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதில் ஆசிரியர் பொன்னுசாமி கூலிப்படை மூலம் மருத்துவர் சுப்பையாவை கொலை செய்தது தெரியவந்தது.

இந்த வழக்கில், ஆசிரியர் பொன்னுசாமி, அவரது மகன்கள் வழக்கறிஞர் பாசில், என்ஜினீயர் போரிஸ், இவர்களது நண்பர்கள் வில்லியம்ஸ், ஜேம்ஸ் சதீஷ்குமார், முருகன் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த செல்வப் பிரகாஷ் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம், கூலிப்படையைச் சேர்ந்த யேசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து கடந்த 2021ம் ஆண்டு சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

சென்னை உயர்நீதிமன்றம்

இந்நிலையில் இந்த வழக்கில் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மேல் முறையீட்டு மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE