பயணம் தொடங்கியது... ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி இன்று புறப்படுகிறார் மோடி!

By கே.காமராஜ்

ஜி 7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி இன்று செல்ல உள்ளார். இந்த பயணத்தின் போது இத்தாலி பிரதமரை அவர் சந்தித்து பேச உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி 7 நாடுகளின் கூட்டமைப்பிற்கு தற்போது இத்தாலி தலைமை தாங்கி வருகிறது. இந்த ஜி 7 கூட்டமைப்பின் உச்சி மாநாடு இத்தாலியில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக 3வது முறையாக இந்திய பிரதமராக பொறுப்பேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இத்தாலி பிரதமர் மெலோனி உடன் மோடி

அதன்படி ஜூன் மாதம் 14-ம் தேதி நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று இத்தாலி கிளம்பிச் செல்கிறார். அவருடன் இந்திய உயர் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றும் பயணிக்க உள்ளது. இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில், இந்த முறை உக்ரைன் மற்றும் காசா பகுதிகளில் நடைபெற்று வரும் போர்கள் குறித்தான விவாதங்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. போர் காரணமாக பிற நாடுகளில் ஏற்பட்டுள்ள உணவு, எரிபொருள், உரங்கள் தட்டுப்பாடு மற்றும் சர்வதேச அளவில் பொருட்கள் போக்குவரத்து ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஜி7 நாடுகளின் தலைவர்கள்

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டின் போது எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை ஒட்டி இங்கே விவாதங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் போது இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி உள்ளிட்ட என தலைவர்களையும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பார் என வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE