சமூக ஊடகங்களில் பாஜகவினர் தங்கள் பெயரின் பின்னொட்டாக முக்கிய அடையாளத்தை மாற்றுமாறு பிரதமர் மோடி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. இந்த தேர்தல் வெற்றியை குறிவைத்து, முன்னதாக பல்வேறு வியூகங்களை பாஜக முன்னெடுத்தது. அவற்றில் சமூக ஊடகங்களை புரட்டிப் போட்ட ‘மோடியின் குடும்பம்’ என்பதும் ஒன்று.
‘மோடி குடும்பம் இல்லாதவர்’ என ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் குறிப்பிட்டதை அடுத்து நாடெங்கும் பாஜகவினர் பொங்கியெழுந்தனர். ’நாங்கள் அனைவரும் மோடியின் குடும்பம்’ என்று பொருள்படும் ‘மோடி கா பரிவார்’ பிரச்சாரத்தை பாஜகவினர் அனைவரும் கையிலெடுத்தனர். இதன்படி சமூக ஊடகங்களில் தங்கள் பெயருடன் ’மோடியின் குடும்பம்’ என்ற பின்னொட்டை இணைத்துக்கொண்டனர்.
பாஜக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமன்றி வெளிநாடு வாழ் பாஜக ஆதரவாளர்களும் இந்த மோடியின் குடும்பம் பிரச்சாரத்தில் குதித்தனர்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மோடியின் குடும்பம் என்பதும் முக்கிய பிரச்சார உத்தியாக மாறிப்போனது. தற்போது தேர்தல் முடிவடைந்து பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை தனது பணிகளை தொடங்கிய பிறகு, மோடியின் குடும்பம் பின்னொட்டுக்கு தேவை குறைந்துள்ளது. இதனை மோடி தனது எக்ஸ் தளத்தின் வாயிலாக இன்று அறிவித்துள்ளார்.
“தேர்தல் பிரச்சாரத்தின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள மக்கள் என் மீதான பாசத்தின் அடையாளமாக 'மோடி கா பரிவார்' என்பதை தங்கள் சமூக ஊடகங்களில் சேர்த்தனர். அதிலிருந்து நான் நிறைய பலம் பெற்றேன். தற்போது இந்திய மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக என்டிஏக்கு பெரும்பான்மையை அளித்துள்ளனர்.
நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தியை திறம்பட வெளிப்படுத்தி இருப்பதன் மூலம், இந்திய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உங்கள் சமூக ஊடக கணக்குகளில் இருந்து 'மோடி கா பரிவார்'(மோடியின் குடும்பம்) என்பதை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எனினும் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஒரு குடும்பம் என்ற நமது பிணைப்பு மேலும் வலுவாகவும் உடைக்கப்படாமலும் தொடரட்டும்” என உருக்கமாக அந்த பதிவில் மோடி தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!
விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!
போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!
வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!