சிவகங்கை அருகே மதகுப்பட்டியில் தனியார் அடகுக்கடை ஒன்றின் சுவரை துளையிட்டு 300 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை அருகே உள்ள மதகுப்பட்டியில் தச்சம்புதுப்பட்டு சாலையில் பாண்டிதுரை என்பவர் ஏழுமலையான் பைனான்ஸ் மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார்.
இவரது அடகுகடையின் பின்புற சுவரை நேற்று இரவு, மர்ம நபர்கள் துளையிட்டு உள்ளே புகுந்து லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 300 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை இந்த தகவலறிந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன், போலீஸார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அடகு கடை உரிமையாளர்கள், அப்பகுதியில் இருந்தவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே சம்பவத்தன்று அடகு கடையின் காவலாளி விடுப்பில் சென்றிருந்தது போலீஸாரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து, காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உத்தரவின் பேரில், டிஎஸ்பி சிபி சாய் சவுந்தர்யன், காவல் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதகுப்பட்டி காவல் நிலையத்தில் இரவு நேரப்பணியில் இருந்த சிறப்பு எஸ்ஐ மற்றும் காவலர் ஆகிய இருவரை ஆயுதப்படைக்கு மாற்றி காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இச்சூழலில் முதல்கட்டமாக 300 பவுன், ரூ.3 லட்சம் ரொக்கம் திருடு போயுள்ளதாக கூறப்படும் நிலையில், அடகுக்கடை உரிமையாளர் தரப்பில் கூடுதல் நகை திருடு போயுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது திருடுப்போன நகைகளின் அளவை மதிப்பிடும் பணி நடந்து வருவதாக கூறப்படுகிறது. எனினும் இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் விரைவில் பிடிக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
ஆயுத பூஜை விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!
விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!
போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!
வேலைநிறுத்தம் வாபஸ்... இன்று முதல் மீண்டும் உற்பத்தியை துவங்கிய பட்டாசு ஆலைகள்!