விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!

By கே.காமராஜ்

புதுச்சேரியில் வீட்டின் கழிவறைக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் அடுத்தடுத்த விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையம் பகுதியில் செந்தாமரை (72) என்பவர் தனது மகள் காமாட்சி மற்றும் பேத்தி பாக்கியலட்சுமி (15) ஆகியோருடன் வசித்து வருகிறார். இன்று காலை செந்தாமரை கழிவறைக்கு சென்ற போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரை மீட்பதற்காக மகள் காமாட்சி சென்ற போது அவரும் திடீரென மயங்கி விழுந்தார். இருவரையும் காப்பாற்ற சென்ற சிறுமி பாக்கியலட்சுமியும் அங்கேயே மயங்கி விழுந்தார்.

உயிரிழப்பு

மூவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு செந்தாமரை மற்றும் அவரது மகள் பாக்கியலட்சுமி ஆகியோர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடனடியாக சிறுமி பாக்கியலட்சுமிக்கு சிகிச்சையை மருத்துவர்கள் துவங்கிய போதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீஸார், வருவாய்த் துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர், உள்ளிட்டோர் வட்டாட்சியர் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சம்பவ இடத்தில் அதிகாரிகள் குவிப்பு

அங்கு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது பாதாள சாக்கடை கடந்த சில நாட்களாக அடைத்திருந்ததாகவும், இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதன் காரணமாக விஷவாயு உருவாகி செந்தாமரையின் வீட்டில் இருந்த கழிவறையில் இருந்து விஷவாயு வெளியேறி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து செந்தாமரையின் வீட்டில் அருகில் வசித்து வரும் குடும்பத்தினர் உடனடியாக வெளியேற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

தொடர்ந்து பாதாள சாக்கடையில் தேங்கியுள்ள நீரை அகற்றவும், அடைப்புகள் ஏதேனும் உள்ளதா என்பதை ஆய்வு செய்யவும் நகராட்சி மற்றும் வருவாய் துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் அடுத்தடுத்து விஷவாயு தாக்கி உயிரிழந்த இந்த சம்பவம் காரணமாக புதுச்சேரியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE