போலி ஆபாச வீடியோவை வைத்து தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல்... உதவியாளர் கைது!

By கவிதா குமார்

தருமபுர ஆதீனத்தை போலி ஆபாச வீடியோவை வைத்து மிரட்டிய வழக்கில், தேடப்பட்டு வந்த ஆதீன உதவியாளர் செந்தில் உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறையில் உள்ள பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27வது குரு மகா சன்னிதானமாக உள்ளவர், ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள். இவர் தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் உள்ளதாக நிர்வாகத்தினரைத் தொடர்பு கொண்டு சிலர் மிரட்டி பணம் கேட்டதாக புகார் எழுந்தது.

தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார்

பணம் தராவிட்டால் ஆபாச வீடியோ, ஆடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என தருமபுரம் ஆதீனத்திடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக, பாஜக மாவட்டத் தலைவர் அகோரம் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஆடுதுறை பாஜக பிரமுகர் வினோத், குடியரசு, விக்னேஷ், ஸ்ரீநிவாஸ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள். தலைமறைவாயினர். அவர்கள் 5 பேரையும் போலீஸார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தை போலி ஆபாச வீடியோவை வைத்து மிரட்டிய வழக்கில், தேடப்பட்டு வந்த ஆதீன முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில், உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, சிறப்பு தனிப்படை போலீஸார், செந்திலை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE