கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் இன்று திறப்பு; மாணவ, மாணவிகள் உற்சாகம்!

By வ.வைரப்பெருமாள்

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. முதல் நாளிலேயே மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு சென்றனர்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் பள்ளி இறுதித் தேர்வுகள் நிறைவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல் காரணமாக பள்ளிகளில் வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் தேர்தல் நடவடிக்கைகள் முடிவடைந்து கடந்த 6ம் தேதி முதல் 1 முதல் 12ம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு

இச்சூழலில் தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதுமே கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால், மாணவர்கள், ஆசிரியர்கள் நலன் கருதி, பள்ளி திறக்கப்படும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 4 நாள்கள் தள்ளி, இன்று முதல் தமிழகம் முழுவதுமே அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

முதல் நாளிலேயே மாணவ, மாணவிகள் புதிய சீருடைகளில் உற்சாகமாக புதிய வகுப்புகளுக்கு சென்றனர். பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகளை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு முதல் நாளிலேயே இலவச பாடபுத்தகங்கள், நோட்டுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளது.

இதேபோல் மாணவ, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை, மாணவ, மாணவிகளை உரிய நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி, ஏற்றி, இறக்கிச் செல்ல போக்குவரத்துத் துறைக்கு உரிய அறிவுறுத்தல்களையும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE