நரேந்திர தாமோதரதாஸ் மோடி ஆகிய நான்... நேருவின் சாதனையை நேர் செய்த மோடி

By காமதேனு

மோடி 3.0 ஆட்சியின் தொடக்கமாக இன்று மாலை டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற வைபவத்தில் மூன்றாம் முறையாக மோடி பிரதமர் பதவியேற்றார்.

2014, 2019 என பிரதமராக மோடி தலைமையிலான ஆட்சி தனிப்பெரும்பான்மையுடன் அமைந்தது. ஆனால் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை வாய்க்காது போனாலும் கூட்டணி கட்சிகளுடன் மோடியின் ஹாட்ரிக் ஆட்சி வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் சவடால்கள், கூட்டணி கட்சியினரின் குடைச்சல்கள் என பலதரப்பு சவால்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக மீண்டும் மோடி ஆட்சியில் அமர்ந்திருக்கிறார். பிரதமராக மோடி பதவியேற்றதை தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்காரி, ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் பதவியேற்றனர்.

பாஜக தலைவரான ஜெ.பி.நட்டா கேபினெட் அமைச்சராக பதவியேற்றிருப்பதை அடுத்து, கட்சித் தலைவராக பொறுப்பேற்கப் போகிறவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வகையில் கட்சியிலும், ஆட்சியிலும் அதிரடி மாற்றங்கள் தொடரும் எனத் தெரிய வருகிறது.

தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றதில், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை மோடி சமன் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE