மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) பெரும்பான்மை பெற்றதை அடுத்து, சத்தீஸ்கரில் 30 வயது இளைஞர் ஒருவர் தனது விரலை வெட்டி கோவிலில் காளி தேவிக்கு வழங்கினார்.
கடந்த 4ம் தேதி அன்று வெளியான மக்களவைத் தேர்தல் முடிவுகளில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி பெரும்பான்மை பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.
இந்நிலையில், என்டிஏ கூட்டணி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநிலம், பல்ராம்பூரில் தீவிர பாஜக ஆதரவாளரான துர்கேஷ் பாண்டே (30) தனது கைவிரலை வெட்டி கோயிலில் காணிக்கை செலுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
மக்களவைத் தேர்தல் ஆரம்ப முடிவுகளில் சில இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது என்பதை அறிந்து துர்கேஷ் பாண்டே மனச்சோர்வுக்கு ஆளாகியுள்ளார். பின்னர் அவர் அங்குள்ள காளி கோயிலுக்குச் சென்று பாஜகவின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்துள்ளார்.
இந்நிலையில், மாலையில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததையும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 272 என்ற பெரும்பான்மை இலக்கைக் கடந்ததையும் அறிந்த துர்கேஷ் பாண்டே, மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். பின்னர், அவர் மீண்டும் காளி கோயிலுக்குச் சென்று, தனது இடது கை விரலை வெட்டி தெய்வத்துக்கு காணிக்கையாக வழங்கினார்.
இந்நிலையில், தனது கையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்ததால், துணியால் சுற்று ரத்தப்போக்கை நிறுத்த முயன்றார். இருப்பினும், நிலைமை மோசமடைந்ததால், இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் சமாரியில் உள்ள மருத்துவமனைக்கு துர்கேஷ் பாண்டேவை அழைத்துச் சென்றனர்.
அதன் பின்னர் அம்பிகாப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்பதே அனைத்துத் தரப்பினரின் அறிவுறுத்தலாக உள்ளது.