பாஜக மாநில தலைவர் பதவி விலக வேண்டும்... திடீரென போர்க்கொடி உயர்த்திய முன்னாள் தலைவர்

By கே.காமராஜ்

புதுச்சேரியில் அமைச்சர் பொறுப்பில் இருந்த பாஜக வேட்பாளர் தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று மாநில தலைவர் ராஜினாமா செய்ய வேண்டுமென, முன்னாள் தலைவர் சாமிநாதன் அறிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் மாநிலத்தில் அமைச்சராக பதவி வகித்து வரும் நமச்சிவாயமும், காங்கிரஸ் சார்பில் வைத்தியலிங்கமும் போட்டியிட்டனர். கடந்த 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் வைத்தியலிங்கம் வெற்றி பெற்றார். இந்நிலையில் பாஜக வேட்பாளரின் தோல்விக்கு மாநில தலைவரே காரணம் என அக்கட்சியைச் சேர்ந்த பலரும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் அறிக்கை

இந்நிலையில் புதுச்சேரி மாநில பாஜகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சாமிநாதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ’கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அமைப்பு ரீதியாக பலமாக கட்டமைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 6 உறுப்பினர்கள் முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டனர். கூட்டணி ஆட்சியில் பாஜக பங்கு பெற்றுள்ளது. மாநிலத்திற்கு கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்டங்களை பாஜக ஆதரவுடன் ஆளும் என்ஆர் காங்கிரஸ் கட்சி செய்து வருகிறது.’

காங்கிரஸ் வைத்தியலிங்கம் - பாஜக நமச்சிவாயம்

’இந்நிலையில் எந்தவித அனுபவமும் இல்லாமல் திடீரென கட்சி தலைமை பொறுப்பேற்ற தற்போதைய தலைவர் செல்வகணபதி, மோசமான நிர்வாக திறமையை வெளிப்படுத்தி உள்ளார். அனுபவம் வாய்ந்த நிர்வாகிகளை நீக்கிவிட்டு, தன் சொந்த நிறுவனம் போல் கட்சியை 6 மாதங்களாக தவறாக வழி நடத்தி வந்துள்ளார். ஆளுங்கட்சியில் அமைச்சராக உள்ள ஒரு வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டதற்கு புதுச்சேரி தலைவர் செல்வகணபதி தான் முழுக் காரணம். எனவே தார்மீக பொறுப்பேற்று அவர் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.’

புதுச்சேரி பாஜக மாநில தலைவர் செல்வகணபதி

‘புதுச்சேரி மக்களவைத் தொகுதி உறுப்பினரை காங்கிரஸுக்கு தாரை வார்த்த பெருமை செல்வகணபதியையே சேரும். எனவே கட்சியின் எதிர்கால நலன் கருதி உடனடியாக அவர் ராஜினாமா செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE