ராமோஜி ராவ் காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்!

By கவிதா குமார்

ராமோஜி பிலிம் சிட்டி நிறுவனரும், ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமோஜி ராவ் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 87. அன்னாரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஈநாடு மற்றும் ராமோஜி குழும நிறுவனர் ராமோஜிராவ் 1936 நவம்பர் 16-ம் தேதி ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் புடபருபுடி கிராமத்தில் பிறந்தார். உயர் ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக அவர் கடந்த ஜூன் 5-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ராமோஜி ராவ்

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

அவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், " ஸ்ரீ ராமோஜி ராவ் அவர்களின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. இந்திய ஊடகத்தில் புரட்சியை ஏற்படுத்திய தொலைநோக்கு பார்வையாளராக இருந்தார்.

ராமோஜி ராவ்வுடன் பிரதமர் மோடி

அவரது செழுமையான பங்களிப்புகள் பத்திரிகை மற்றும் திரைப்பட உலகில் அழியாத முத்திரையை பதித்துள்ளன. அவரது குறிப்பிடத்தக்க முயற்சிகள் மூலம், அவர் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உலகில் புதுமை மற்றும் சிறப்பிற்கான புதிய தரங்களை அமைத்தார்.

அவருடன் பழகுவதற்கும் அவருடைய ஞானத்தால் பயனடைவதற்கும் பல வாய்ப்புகளைப் பெற்றதற்கு நான் அதிர்ஷ்டசாலி. இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு இரங்கல்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

ராமோஜி ராவின் மறைவுக்குத் தெலங்கானா பாஜக தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான ஜி. கிஷன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். “ஊடகத்துறையின் முன்னோடியாகவும், தகவல் துறையில் பல சீர்திருத்தங்கள் மற்றும் விழுமியங்களுக்கு முன்னோடியாகவும் இருந்த ராமோஜி ராவ் இன்று மறைந்தார் என்பதை அறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன்.

அர்ப்பணிப்புடனும், ஒழுக்கத்துடனும், விடாமுயற்சியுடனும் பணியாற்றியவர் ஆவார். ராமோஜி ராவின் மறைவு தெலுங்கு ஊடகத்துறைக்கும், தொலைக்காட்சித் துறைக்கும், தெலுங்கு மாநிலங்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும். ராமோஜி ராவின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE