கன மழை: கள்ளக்குறிச்சி பகுதியில் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

By வ.வைரப்பெருமாள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே 500 ஏக்கர் நெற்பயிர்கள் கனமழையால் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த சிலநாள்களாக இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. வரும் 12ம் தேதி வரை மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழை

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் சங்கராபுரம் பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள், விவசாய கிணறுகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இந்நிலையில் இப்பகுதியில் நேற்று கன மழை பெய்தது. இதன் காரணமாக இங்குள்ள தியாகராஜபுரம் கிராமம் சுற்று வட்டாரத்தில் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கன மழைக்கு நெற் பயிர்கள் சேதம்

இப்பகுதியில் சுமார் 500 ஏக்கர் அளவுக்கு நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அரசுத் துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE